மதுரையில் தினமும் பல கி.மீ தூரம் நடந்து சென்று கிழிந்த துணிகளை தைக்கும் தொழிலாளிக்கும் முதல்வர் உதவி , அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.

Published Date: May 18, 2023

CATEGORY: CONSTITUENCY

மதுரையில் வீட்டுமனை வழங்க முதலமைச்சர் உத்தரவுவிட்ட தையல் தொழிலாளியை தனது வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்று அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதியுதவி வழங்கினார்.

மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி ஒன்பதாவது தெருவில் மனைவியுடன் வசித்து வருபவர் நாகேஷ், இவர் தினமும் தையல் இயந்திரத்தை தூக்கிக்கொண்டு நடைபயணமாகவே சென்று வீடுகளில் கொடுக்கும் கிழிந்த துணிகளை தைத்து கொடுத்து பணம் சம்பாதித்து வந்தார். இவர் கஷ்டப்பட்டு உழைத்து வருவது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.

இதனைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டுமனை வழங்க உத்தரவிட்டிருந்தார். இவரை மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் அமைச்சர்  பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று அழைத்து சென்றார். அங்கு அவருக்கு தேவையான நிதி உதவிகளை வழங்கி உதவினார்.

இதுகுறித்து நாகேஷ் கூறும் போது," தினமும் பல கிமீ தூரம் தையல் இயந்திரத்துடன் நடந்தால் தான் ரூ. 200, ரூ. 300 கிடைக்கும். 30 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.300 கொடுத்து வாங்கிய தையல் இயந்திரத்தை தான் தற்போது பயன்படுத்தி வருகிறேன்.

வீட்டில் காலை சாப்பிட்டு வந்த பின்னர் மாலை வீடு திரும்பி இரவில் தான் சாப்பிடுவேன். மதியம் சாப்பிட மாட்டேன். சில நாட்களில் துணிகள் கிடைப்பதில்லை. வீட்டுக்கு வாடகையாக மாதம் ரூ. 2 ஆயிரம் தர வேண்டும். முதல்வர் மு.க. ஸ்டாலின் வீட்டுமனை வழங்குவதாக தெரிந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் என்னை அவரது காரில் அழைத்துச் சென்று தேவையான நிதி உதவிகளை வழங்கி அனுப்பி வைத்துள்ளார். இது எனக்கு மேலும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

Media: Dinakaran